ரோகினி சினிமாஸ் மீது நடிகர்கள் கண்டனம்! | Actors condemn againt Rohini Cinemas
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல.பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல ரிலீஸானது. நேற்று காலை 8 மணி காட்சியை பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் சென்றிருந்தனர். அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நடிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அவமதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், நடிகர் விஜய்சேதுபதி, பத்து தல படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் மற்றும் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் ரோகிணி தியேட்டருக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தபோது இதுதொடர்பான கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “யாரும் யாரையும் ஒடுக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அது எங்கு நடந்தாலும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்ருக்கு” என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
ப்ரியா பவானி சங்கர்
பத்து தல படத்தில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்ககுல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னனு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல்.

அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவரகள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு” என குறிப்பிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ்
இந்த விவகாரம் வெளியே தெரிந்த பிறகு முதல் ஆளாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசன்
திரையரங்கத்தை கண்டித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் பதிவு செய்திருக்கும் ட்வீடில், “டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டிருந்தார்.