23வது திருமண நாளை கொண்டாடும் நடிகை குஷ்பூ | Actress Kushboo is celebrating her 23rd wedding anniversary
நடிகை குஷ்பூ, 1980ம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான தி பர்னிங் ட்ரெயின் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கடந்த 1988ம் ஆண்டில் தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபு ஜோடியாக நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், சுஹாசினி உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் குஷ்பூவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல ஹிட்களையும் கொடுத்துள்ளார் குஷ்பூ. கொழுக் மொழுக் என்று இருந்த குஷ்பூவிற்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர். தற்போதும் இந்த எண்ணிக்கை குறையாமல்தான் உள்ளது. குஷ்பூவிற்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்கள், அவருடைய பெயரை ஒரு இட்லிக்கும் வைத்து அழகுப் பார்த்தனர்.

இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட குஷ்பூ தமிழ்நாட்டு மருமகளானார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தயாரிப்பிலும் மற்றொருவர் நடிப்பிலும் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்றைய தினம் தன்னுடைய 23வது திருமண நாளையொட்டி இன்ஸ்டாகிராமில் குஷ்பூ 4 புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கையே அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
