மல்லிப்பூ பாடல் செய்த சாதனை | An achievement made by the Mallipoo Vachu Vachu Vaaduthey song
சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் யூட்யூபில் சாதனை படைத்திருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படத்தை கொடுத்த கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் சிம்பு. ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டிருந்தது. அதில் சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் ஹிட்டானது.

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பக்க பலமாக இருந்தது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது. குறிப்பாக மல்லிப்பூ என்ற பாடல் வெளியானதுமே ரசிகர்களை கவர ஆரம்பித்துவிட்டது. பாடலை மதுஸ்ரீ பாட பாடலாசிரியர் தாமரை அந்தப் பாடலை எழுதியிருந்தார்.

மதுஸ்ரீயின் குரலும், தாமரையின் வரிகளும் ரசிகர்ளை கட்டிப்போட அந்தப் பாடலை பாடியும், பாடலுக்கு நடனமாடியும் பலரும் ரீல்ஸாக வெளியிட்டனர். சில மாதங்கள் சமூக வலைதளங்களை திறந்தாலே அந்தப் பாடல் குறித்த பேச்சாகத்தான் இருந்தது. இந்நிலையில் மல்லிப்பூ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது யூட்யூபில் அந்தப் பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்தத் தகவலை வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.