பயமுறுத்தியதா.? கனெக்ட் திரை விமர்சனம்..!(Connect Movie review)

தமிழ் சினிமாவில் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த பேய்கள் மறுபடியும் திரையை எட்டி பார்க்க வந்து விட்டன. பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளுக்கும் கடவுளை ஏற்றுக் கொள்ளாத சாத்தான்களுக்கும் இடையே நடக்கும் முரண் தான் கனெக்ட் .
மாயா, கேம் ஓவர் போன்ற பேய் படங்களை தந்த அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இந்த த்ரில்லர் திரைப்படம் த்ரில்லா இருக்குதா வாங்க பார்க்கலாம்.
படக்குழு

இயக்கம்:
அஷ்வின் சரவணன்
தயாரிப்பு:
விக்னேஷ் சிவன்
வெளியீடு:
ரவுடி பிக்சர்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
நயன்தாரா, சத்யராஜ், வினய், அனுபம் கர், ஹனியா நஃபிஸ்
இசை:
பிருத்வி சந்திரசேகர்
படத்தின் கதை
உலகமே முடங்கி இருக்கும் கோவிட் லாக் டவுன் நேரத்தில் கதை தொடங்குகிறது. ஜோசப் (வினய் ராய்), தொழிலில் ஒரு மருத்துவர், சூசன் (நயன்தாரா), அவர்களின் டீன் ஏஜ் மகள் அன்னா (ஹனியா நஃபிசா), மற்றும் சூசனின் வயதான தந்தை ஆர்தர் (சத்யராஜ்) என ஒரு அழகான குடும்பமாக அவர்களது வாழ்க்கை நகர்கிறது. வினய் தனது மகள் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர். மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கை நகரும்போது நகரில் கொரோனா தொற்று பரவி ஊரடங்கு போடுகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினய் நோய் தாக்கி இறந்து போகிறார். இதனால் குடும்பம் இடிந்து போகிறது. நயன்தாராவும், மகளும் மட்டும் வீட்டில் இருக்கிறார்கள். அப்போது அன்னாவின் மறைந்த தந்தையுடன் தொடர்புகொள்வதற்கு Ouija பலகை உதவியோடு அனியா தந்தை ஆவியுடன் பேச முயற்சிக்கிறார். விதி அவர்களின் இடத்திற்கு ஒரு தீய ஆவியைக் கொண்டுவருகிறது. இப்போது தன் மகளுக்குப் பிடித்துவிட்டதால் வித்தியாசமாக நடந்து கொள்கிறார் அனா. அம்மாவும், தாத்தாவும் வேறு ஒரு பேய் அனா மீது வந்துள்ளதாக கண்டு பிடிக்கிறார்கள். நயன் தான் இந்த ஆபத்தை தானே சமாளிக்க வேண்டியிருக்கிறது.
இதன் பிறகு மும்பையில் உள்ள சர்ச்சில் இருக்கும் பாதர் அகஸ்டினை (அனுபம்கர் ) தொடர்பு கொள்கிறார்கள். தந்தையும் ஆன்லைன் மூலம் அனா மீது இருக்கும் துஷ்ட சக்தியை விரட்ட முயற்சிக்கிறார். இறந்த தந்தையின் ஆன்மாவுடன் அவரால் பேச முடிந்ததா? நயன் முயற்சியால் தன் மகளை எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக் கதையின் சுவாரஷ்யம் அதை திக் திக் திரைக்கதையில் சொல்லியுள்ளனர்.

திறமையின் தேடல்
கதையில் நாயகன், நாயகி எல்லாமே நயன்தாரா தான். சகல இடங்களிலும் சிறந்த நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு கிரீடம் சூட்டுகிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பு ராட்சசியாக விஸ்வரூபம் எடுக்கிறார். அன்பு, பரிதவிப்பு என ஒரு சராசரி அம்மாவாக சபாஷ் போட வைக்கிறார் நயன்தாரா.
அப்பாவாக வரும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். சத்தியராஜ் நம் வீட்டு தாத்தாவை நினைவு படுத்துகிறார்.
மகளாக வரும் அனியா நபீசா நல்ல தேர்வு. தந்தையை இழந்த மகளாகவும், பேய் பிடித்த போது ஆக்ரோஷமாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார் அனியா . வினய் சிறிது நேரமே வந்தாலும் கேரக்டருக்கு குந்தகம் இல்லாமல் வலுவாக நிற்கிறார். பாதிரியாராக வரும் அனுபம் கேர் கதையை முடித்து வைக்கும் கனமான வேலைக்கு கச்சிதமான தேர்வு.

தோழியாக வரும் லிஸி, மீடியமாக வரும் மேகா ராஜன், தெரபிஸ்ட்டாக வரும் பிரவீனா நண்டு உட்பட குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் தொய்வு இல்லாமல் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி, இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர் இருவரும் போட்டி போட்டு வேலை செய்துள்ளனர். ஒரு காட்சியில் ஒளிப்பதிவாளர் மிரட்ட, அடுத்த காட்சியில் இசையமைப்பாளர் தியேட்டரையே இசையால் மிரள வைக்கிறார்.
திகில் கலந்து சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். பி 98 நிமிட படத்தில் ஒரு திகில் விஸுவல் டிரீட்மென்ட் தந்துள்ளார் டைரக்டர். யாரும் வெளியே வர முடியாத லாக் டவுன் கால கட்டத்தில் இது போன்ற பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்ற உணர்வை ரசிகனுக்கு தருவதில் டைரக்டர் வெற்றி பெற்றுள்ளார்.
படத்தின் சிறப்பு
சஸ்பென்ஸுடன் விறுவிறுப்பு
நடிகர்களின் நடிப்பு,
ஒளிப்பதிவு,
இசை

படத்தின் சொதப்பல்கள்
வீட்டுக்குள்ளேயேயும், இருட்டிலும் சில காட்சிகள்
இறுதியில் பழைய கதை தான்
மதிப்பீடு: 2.9/5
தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள வலுவான தொடர்பை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை ஹொரர் திரைப்படமாக பல திகிலூட்டும் காட்சிகளுடன் பார்க்கலாம். ஒரு சிறந்த ஹாரர் படத்தை கனெக்ட் உங்களுக்கு தருவது உறுதி.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.