காரில் ஒரு காலப்பயணம், டிரைவர் ஜமுனா விமர்சனம்..!(Driver Jamuna Movie review)

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் `வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் கதாநாயகிக்கான ஒரு கதைக்களத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் டிரைவர் ஜமுனா..வாங்க பார்க்கலாம்..
படக்குழு

இயக்கம்:
பி கின்ஸ்லின்
தயாரிப்பு:
எஸ் .பி. சௌதாரி
வெளியீடு:
18 ரீல்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
ஐஸ்வர்யா ராஜேஷ், அபிஷேக் குமார், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ்
இசை:
ஜிப்ரான்
படத்தின் கதை
ஒரு பெண் டாக்சி டிரைவரான ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்) எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்திக்கும் போது, ஏற்படும் திருப்பங்களே இப்படம் ஆகும்.
தந்தையை இழந்த ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தந்தை இறந்த பிறகு வீட்டை அடைமானம் வைத்துவிட்டு ஓடிவிட்ட தம்பி, நோய்வாய்ப்பட்ட அம்மா எனப் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் கால் டாக்ஸி ஓட்டுநர் பணியைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவை(அரசியல்வாதியான ஆடுகளம் நரேன்)கொல்ல சதித்திட்டம் தீட்டும் கூலிப்படை கும்பலின் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அவர்கள் வாடகைக் கார் ஒன்றை புக் செய்கிறார்கள். அந்தக் காரை ஓட்டி வரும் ஜமுனாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவர்கள் மீது சந்தேகம் துளிர்விடுகிறது.
ஆரம்பத்தில் மறுத்தாலும் ஜமுனா, வேறு வழியில்லாமல் அவர்களை காரில் ஏற்றிக்கொள்கிறார். அவர்களை போலீஸும் ஒரு புறம் துரத்தி வருகிறது. அதன் பின் தான் அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. ஒருபுறம் கூலிப்படையைப் பிடிக்க உதவி கமிஷனர் துடித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் கூலிப்படையின் பிடியில் ஐஸ்வர்யா சிக்கித் தவிக்கிறார். இவர்களிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா, கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா, ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ன… போன்ற கேள்விகளுக்கான பதிலே மிகுதி படம்.

திறமையின் தேடல்
ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தனிப்பெண்ணாக வீரத்துடன் நடித்துள்ளார். அவரது பாத்திரத்தில் பொருத்தமாக வழமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். சில நேரங்களில் ஒருவித அலுப்பையே தருகிறது. கிளைமாக்சில் சிறப்பாக நடித்துள்ளார்.
தனது துறுதுறு நடிப்பால், ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரம் கவனம் பெறுகிறது. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீரஞ்சனி நடிப்பில் வலு சேர்த்துள்ளார். ‘ஆடுகளம்’ நரேன் முன்னாள் எம்.எல்.ஏ-வாக வரும் தனது நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார்., இளையபாண்டி ‘பிக்பாஸ்’ பாஸ் மணிகண்டன் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

விறுவிறுப்பான திரைக்கதையில், கொஞ்சம் இளைப்பாறலாக இருக்க வேண்டிய அபிஷேக்கின் காமெடிகள், தொந்தரவாகவே இருக்கின்றன.காரில் உள்ள கூலிப்படையினர் நாடகத்தனமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ரிஸ்க் எடுத்து காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் பின்னணி இசை பரவாயில்லை. நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒரு திரைக்கதையை அமைத்தற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் `வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் கையில் எடுத்திருக்கும் கதைக்களம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாததுதான் என்றாலும், கொஞ்சம் சறுக்கியுள்ளதே எனலாம்.
படத்தின் சிறப்பு
முதற்பாதி
நடிகர்களின் நடிப்பு
ஒளிப்பதிவு
பிண்ணனி இசை
பெண்நாயகி கதைகளம்
படத்தின் சொதப்பல்கள்
கிளைமாக்ஸில் சறுக்கல்
நாடகத்தனமான நடிப்பு
சில அலுப்புக் காட்சிகள்
கதாபாத்திரத்தின் அழுத்தம் குறைவு

மதிப்பீடு: 2.5/5
மொத்தத்தில் டிரைவர் ஜமுனாவின் பயணம் விறுவிறுப்பாக தொடங்கி அப்படியே கொஞ்சம் பாதையை விட்டு விலகி விட்டது. மற்றும்படி படத்தை பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.