அதகளத்தில் கட்டா குஸ்தி திரைவிமர்சனம்..!(Gatta Kusthi Review)

எப்ஐஆரின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷாலின் அடுத்த படம் கட்டா குஸ்தி. ஒரு கமர்சியல் காமெடி என்டர்டெய்னராக கட்டா குஸ்தி உள்ளதாம். வாங்க கதையை கேட்டு விட்டு படத்தை பாருங்க..
படக்குழு

இயக்கம்:
செல்லா அய்யாவு
தயாரிப்பு:
விஷ்ணுவிஷால், ரவிதேஜா
வெளியீடு:
ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள்
முக்கிய கதாபாத்திரங்கள்:
ஐஸ்வர்யா லட்சுமி, விஷ்ணு விஷால், கஜராஜ்,கருணாஸ், ஸ்ரீஜா ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஹரீஷ் பேரடி, அஜய், சத்ரு
இசை:
ஜஸ்டின் பிரபாகர்
படத்தின் கதை
படத்தின் கதாநாயகன் தனக்கு வர போகும் மனைவிக்கு 2 கண்டிஷன் போட்டிருப்பார். அந்த கண்டிஷன்களுக்கு மாறாக கதாநாயகி மனைவியாக அமைகிறார். இருவருக்கும் நடக்கும் நிகழ்வே படமாகும்.
அதாவது சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்த வீராவுக்கு ( விஷ்ணுவிஷால்) ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் மாமா கருணாஸ் தான் அவர் உலகம். ஆரம்பத்திலேயே பெண் என்பவள் எப்போதும் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தோடு கருணாஸ், வீராவுக்கும் சொல்லி வளர்க்கிறார்.

இந்த நிலையில்தான் தனக்கு வரும் பெண் தன்னை விட அதிகம் படித்திருக்க கூடாது. முடி நீளமாக இடுப்பிற்கு கீழ் இருக்க வேண்டும் என 2 கண்டிஷன்களோடு வீராவுக்கு பெண் தேடுகின்றனர் குடும்பத்தினர். மறுபுறம் கட்டா குஸ்தி கற்று போட்டிகளில் பதக்கங்களை வென்று, அதனாலேயே மாப்பிள்ளை கிடைக்காமல் திணறி கொண்டிருக்கிறது கீர்த்தியின் ( ஐஸ்வர்யா லட்சுமி) குடும்பம். தனது சித்தப்பா முனீஸ்காந்தின் கட்டா குஸ்தி கலையில் அலாதி ப்ரியத்துடன் வளரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிய சண்டைக்காரி ஆக வேண்டும் ஆசை.
இந்த நிலையில் கீர்த்தியின் சித்தப்பா (முனீஷ்காந்த்) சில பல பொய்களை சொல்லி வீராவுக்கு கீர்த்தியை மண முடித்து வைக்கிறார். அதற்கிடையில் மாமனான கருணாஸ்,கிராமத்திற்கு தீங்காக வரும் தொழிற்சாலையை எதிர்க்கிறார். ஆலை உரிமையாளர் தான் வில்லன். கருணாஸை ஜெயிலுக்கு அனுப்ப, கருணாஸின் வேலையை வீரா மேற்கொள்கிறார். விஷ்ணுவை கண்டித்து வைக்க அவரது மனைவியிடம் வில்லன் தரப்பு அறிவுறுத்துகிறது. அதை மீறி வீரா செயல்படும் போது, அவரை அடித்து துவைக்கிறது வில்லன் தரப்பு.

அதுவரை கணவனுக்கு படிந்த மனைவியாக அமைதியாக இருக்கும் கீர்த்தி( ஐஸ்வர்யா லட்சுமி), கட்டா குஸ்தி போட்டு கணவனை காப்பாற்றுகிறார் . அப்போது தான், கீர்த்தியின் உண்மையான ரூபத்தை பார்க்கிறார் வீரா.
இதனால் முனீஷ்காந்த் சொன்ன பொய்கள் வீராவுக்கு தெரிய வர, அதன் பின்னர் என்ன நடக்கிறது? வில்லன் வீழ்த்தினாரா, வீழ்த்தப்பட்டாரா? கீர்த்தியின் கட்டா குஸ்தி கனவு பலித்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? என்பதே கட்டா குஸ்தி படத்தின் கதை!
திறமையின் தேடல்
எப்.ஐ.ஆர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு நல்லதொரு வெற்றி படமாக வந்திருக்கிறது கட்டா குஸ்தி. வீரா கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தி இருக்கிறார் விஷ்ணு. அவரது காமெடித்தனம் முழுமையாக வொர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், பல இடங்களில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நல்ல நடிப்பு திறமை.
பெயருக்குத்தான் விஷ்ணு கதாநாயகன்.. ஆனால் உண்மையில் படத்தின் கதாநாயகி தான் எல்லாமே யார் என்றால் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமிதான். பூங்குழலியாக கிறங்கடித்த ஐஸ்வர்யா, இதில் ஆக்ஷனில் அதகளம் செய்து இருக்கிறார். படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

கருணாஸ் – முனீஸ்காந்த் காம்போவின் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கருணாஸ், சித்தப்பாவாக முனீஷ்காந்த், கருணாஸின் மனைவி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றன.
இயக்குநர் செல்ல அய்யாவு அனைவரும் சிரிக்கும் படியான கதை எழுத்து அருமை. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஓரளவுக்கு பரவாயில்லை.
படத்தின் சிறப்பு
நடிகர்களின் நடிப்பு
கதாநாயகியின் ஆக்டிங் லெவல்
கதை மற்றும் எழுதப்பட்ட வசனங்கள் சிறப்பு
கமர்சியல் காமெடி
நல்ல கருத்து
படத்தின் சொதப்பல்கள்
முதல் பாதியில் காமெடி அதிகம்
எமோஷ்னல் ஒரே தளத்தில் செல்கிறது

மதிப்பீடு: 3.25/5
நிறைய காமெடி காட்சிகளுடன் கூடிய சிறந்த குடும்ப படமாக கட்டா குஸ்தி உள்ளது. படத்தை பார்க்கும் போது விஷ்ணு விஷால் கட்டா குஸ்தியில் வெற்றி வாகை சூடிவிட்டார் போல தான் தெரிகிறது.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.