லால் சலாம் படத்தில் இணைந்த கபில் தேவ் | Kapil Dev joined in Lal Salaam.
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படம் லைகா தயாரிப்பில் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்க ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கிறார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டரையும் அவரது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அதன்படி மொய்தீன் பாய் என்ற பவர்ஃபுல் கேரக்டரில் நடித்து வருகிறார் ரஜினி. பாட்ஷா படத்திற்குப் பிறகு ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே மும்பையில் ரஜினி நடித்த பிரம்மாண்டமான சண்டைக் காட்சி மூன்று தினங்களாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சந்தித்துக்கொண்ட போட்டோ வைரலானது. கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று வந்த கபில் தேவ் ரஜினியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், இருவரும் சந்தித்ததன் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது அதனை சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல் உலகக் கோப்பை வென்றுக் கொடுத்த கபில் தேவ் உடன் லால் சலாம் படத்தில் நடிப்பதில் பெருமையும் பாக்கியமும்” என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் கபில் தேவ் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.



