ஃபர்ஹானா சர்ச்சைக்கு விளக்கம் அளித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.| The production company has issued a statement explaining the Farhana controversy.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள திரைப்படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் ஃபர்ஹானா ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே, இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஃபர்ஹானா என்ற முஸ்லிம் பெண் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே புர்கா, தி கேரளா ஸ்டோரி திரைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், ஃபர்ஹானா படத்தை வெளியிடவும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஃபர்ஹானா சர்ச்சை குறித்து விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தங்களது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர் ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஃபர்ஹானா திரைப்படத்தை நாளை (மே 12) ரசிகர்களின் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் தங்கள் நிறுவனம், மிகுந்த சமூக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் தங்களுக்கு அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒருசிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.

ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும், மனித குலத்திற்கு எதிரான ஒரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதும் இல்லை. இதை தங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும் சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல.அது அவ்வாறு எதிர்ப்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாக காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.