பொங்கலுக்கான தளபதியின் விருந்து… வாரிசு திரை விமர்சனம்(Varisu Movie Review)

பொங்கலை முன்னிட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. தளபதி பொங்கல் என்று பலரும் கூறி வரும் நிலையில் இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த இப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா..?
படக்குழு

இயக்கம்:
வம்சி பைடிபைலி
தயாரிப்பு:
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரேஸ் மற்றும் பிவிபி சினிமாவின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ்
வெளியீடு:
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ரெட் ஜெயன்ட் மூவி
முக்கிய கதாபாத்திரங்கள்:
தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, குஷ்பு எஸ்.ஜே. சூர்யா
இசை:
தமன் எஸ்
படத்தின் கதை
ராஜேந்திரன்(சரத்குமார்)- ஜெயசுதா தம்பதியினருக்கு ஜெய் (ஸ்ரீகாந்த்), அஜய் (ஷாம்), விஜய் ராஜேந்தர் (விஜய்)என மூன்று மகன்கள். ஸ்ரீகாந்தின் மனைவியாக சங்கீதா, ஷாமின் மனைவியாக சம்யுக்தா. தொழில் எதிரி பிரகாஷ் ராஜ், அவரின் மகனாக கணேஷ் வெங்கட்ராம் . சங்கீதாவின் சகோதிரியாக ராஷ்மிகா மந்தனா, வேலைக்காரராக யோகிபாபுவும், குடும்ப டாக்டராக பிரபுவும் நடித்துள்ளார்கள்.

நடிகர் சரத்குமார் ராஜேந்திர குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். அவர் தன்னுடைய 3 மகன்களில் பிசினஸில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே தனது வாரிசாக வருவார் என அறிவிக்கிறார். அதனால் அந்த பெரிய சாம்ராஜியத்தை ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் இருவரிடமும் ஒப்படைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு போட்டியாக ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனியின் உரிமையாளரான பிரகாஷ்ராஜ் ஒரு பக்கம் வருகிறார்.
இந்நிலையில் தனது இரு மகன்களையும் போல மூன்றாவது மகனான விஜயையும் தனது தொழிலுக்குள் இணைக்க ஆசைப்படுகிறார். ஆனால் விஜயிற்கு அதில் இணக்கப்பாடு இல்லை என்பதால் சொந்தமாக தான் தொழில் செய்யவதாக சரத்குமாருக்கும் விஜயிற்கும் இடையிலான அந்த பேச்சு வார்த்தையில் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். இதற்கிடையில் தனக்கு கேன்சர் இருப்பதும், இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்ற உண்மையும் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. இதனால் மனைவியின் ஆசைக்காக தனது அறுபதாம் கல்யாண வைபவ நிகழ்வை நடத்திப் பார்க்க ஆசைப்படுகிறார்.

தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தினால் அதை சாக்காக வைத்து மகனை அழைக்க நினைக்கிறார் அம்மா ஜெயசுதா. இந்த நிகழ்வுக்காக 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜய் வீட்டுக்கு வருகிறார். அதேசமயம் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த்திற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். இரண்டாவது அண்ணா ஷாம் தான் வாங்கிய கடனுக்காக தொழில் ரகசியத்தை எதிரியான கணேஷ் வெங்கட்ராமனிடம் கூறுவதால் இதனால் சரத்குமாரின் சாம்ராஜியம் பிண்ணடைகிறது.
அதை நடிகர் விஜய் சரி செய்தாரா? மற்ற இரு மகன்களினதும் நிலை? சரத்குமார் தனது குடும்ப வாரிசை கண்டுபிடித்து நியமித்தாரா? என்பதே மீதி சுவாரஷ்யம்
திறமையின் தேடல்
நடிகர் விஜயின் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும். அதே இளமை மாறாமல் பட்டையை கிளப்பியிருக்கிறார். முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை படத்தை தாங்குகிறார். குடும்பபாசம்,காதல், ஆக்ஷன் நடனம், அதிரடிக் காட்சிகள் என அனைத்திலும் மீண்டும் தன்னை விஜய் நிரூபித்துள்ளார். அவரது ஆட்டம் திரையரங்கை ஆர்ப்பரித்து அலறவிடுகிறது. குழந்தைத் தனமான சில பாவனைகளும், அதற்கேற்ற உடல்மொழியும் ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்து தான்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய அளவில் படத்தில் கேரக்டர் இல்லை என்றாலும், ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு ஈடாக ஆடி அனைத்து ரசிகர்களையும் கவருகிறார். பிரகாஷ்ராஜ் எப்போதுமே வில்லத்தனத்தில் வேற லெவல் தான். இந்த படத்தில் கொஞ்சம் குறைவுதான். சரத்குமாரின் நடிப்பு அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் வழமை போல் பாராட்டலாம் . தவிர, பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெய சுதா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து படத்தை சிறப்பித்துள்ளனர்.
யோகிபாபு விஜய் இடையேயான டைமிங் காமெடிகள் நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அதேபோல் சில நிமிடங்களே வந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டத்தக்கது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் என்றால் விஜயின் முந்தைய படங்களின் காட்சிகளின் ரெபரன்ஸ்.

பாடல்கள் தொடங்கி பின்னணி இசை வரை தமன் தன் உழைப்பை கொட்டியிருக்கிறார். ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு எந்த மாதிரியான பின்னணி இருக்க வேண்டும் என்பதில் பார்த்து செய்துள்ளார். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு காட்சிக்கு வேற ரகம். தீ தளபதி, ரஞ்சிதமே பாடல் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
இயக்குனர் பற்றி சொல்ல வேண்டுமானால் நல்லதொரு குடும்ப பாங்கான கதையை தெரிவு செய்து அதற்குள் ஆக்சனை புகுத்தி ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ படமாக சென்டிமென்ட் காட்சிகளை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் இயக்குநர் வம்சி.
படத்தின் சிறப்பு
விஜய் மற்றும் ஏனையோரின் நடிப்பு,
வம்சியின் கதைக்களம்
வசனங்கள்
பாடல்கள் மற்றும் இசை
பின்னணி இசை

படத்தின் சொதப்பல்கள்
ஆரம்பத்தில் சற்று சறுக்கல்,
சில காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மதிப்பீடு: 3.5/5
படம் பக்கா கமர்ஷியலால உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அன்பு பாதி ஆக்ஷன் பாதியாக உருவாகியிருக்கும் வாரிசு படம் இந்த பொங்கலுக்கு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை..! ரசிகர்களுக்கு விஜயின் செம விருந்து..
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.