விஷாலின் மார்க் ஆண்டனி பட செட்டில் மீண்டும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் படக்குழுவினர் உள்ளனர் | The film crew is in fear of what will happen again in Vishal’s Mark Antony film set
நடிகர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் மார்க் ஆண்டனி படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை வினோத் தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடந்த வாரம் விபத்து ஒன்று நிகழ்ந்தது. அங்கு ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தபோது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது 100-க்கும் மேற்பட்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் எந்தவித காயமும் இன்றி தப்பினர்.
அந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் மார்க் ஆண்டனி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் மேலும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங்கில் லைட் கம்பம் சரிந்து விழுந்ததில் லைட் மேன் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீட்ட படக்குழுவினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் இப்படி அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருவது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.